Sunday, April 15, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு - 2

என்றென்றும் வற்றாக் கிணறு - 1

(புஹாரி 3364) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை ஆணையின் படி தமது இரண்டாவது மனைவி ஹாஜரையும் சிலமாதங்களேயான கைக்குழந்தை இஸ்மாயீலையும் தனியே ஆளரவமற்ற பாலைவனத்தில் கஃபாவின் அருகே ஓரிடத்தில் விட்டுவிட்டுச் செல்கிறார். இறைவனின் உத்தரவென்பதால் இப்ராஹீம் (அ.ஸ) அவர்களும் வேறுவழியின்றி திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார். ஹாஜர் (அ.ஸ) அவர்களும் இறை உத்தரவை மனதார ஏற்றுக்கொள்கிறார். குழந்தை பசியில் அழும்போது தான் கையில் கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து குடித்து குழந்தைக்கு பாலூட்டுகிறார். சிறிது நேரத்தில் அத்தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது. தண்ணீருக்காக இருபக்கங்களிலுமிருக்கும் மலைகுன்றுகளான சஃபா மற்றும் மர்வா ஆகியவற்றின் மீதேறி யாரும் தென்படுகிறார்களா என்று நடந்தும் ஓடியும் தேடுகிறார். இடையிடையில் குழந்தையின் நிலையையும் ஒரு எட்டு பார்த்துச் செல்கிறார்.(இரு குன்றுகளின் தூரம் 450மீ. அப்படிப் பார்த்தால் மொத்தம் 3.15 கி.மீ. அவர் கடந்திருக்கிறார். மாஷா அல்லாஹ்... இறைவன் தான் அவருக்கு அந்த உறுதியைத் தந்திருக்க வேண்டும்.) இதையே ஹஜ்/உம்ரா செய்யும்போது இவ்விரு மலைக்குன்றுகளினிடையே நடந்தும் ஓடியும் செல்ல கடமையாக்கப்பட்டுள்ளது.

சஃபா மலைக்குன்று

மர்வா மலைக்குன்று


               
(ஏன் ஓடவும் நடக்கவும் செய்யவேண்டும்? ஏனென்றால் ஹாஜர் (அ.ஸ). மலைகுன்றின்மீதேறும்போது குழந்தையின் நிலையை அவர்களால் காணமுடிந்தது. நிலத்தில் செல்லும்போது குழந்தையைக் காண முடியவில்லை. அதனால் நிலத்தில் ஓடியும் மலைகுன்றுகலில் நடந்தும் தன் தேடுதலைத் தொடர்கிறார்.)

இவ்வாறு ஏழாவது முறை தேடிவிட்டு குழந்தையைப் பார்க்க குழந்தையின் அருகே வந்தவர் ஒரு குரலைக் கேட்கிறார்.அது வானவர் ஜிப்ரீல் (அ.ஸ.) அவர்களுடையதே. ஹாஜர் அ.ஸ. அவர்களுக்கு அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான் என்று நம்பிக்கையும் இக்குழந்தையும் இக்குழந்தையின் தந்தையும்  பின்னாளில் இறையில்லத்தை மேம்படுத்துவதில் ஆற்றவிருக்கும் பங்கு பற்றி நற்செய்தியும் தெரிவித்தவர் தம் இறக்கையால் மணலை தோண்ட நீர் தோன்றுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடவே ஹாஜர்(அ.ஸ.) அவர்கள் தன்னையும் அறியாமல் நில் நில் (அரபியில் ஸம்ஸம்) எனக் கூறிக்கொண்டே தமது கையால் அதைச் சுற்றி ஒரு தடுப்பும் எழுப்புகிறார்.

(இதையே பிற்காலத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் மட்டும் தடுப்பு எழுப்பவில்லையாயின் ஸம்ஸம் கிணறாக இல்லாமல் ஒரு ஓடுகிற நீரோடையாக நமக்குக் கிடைத்திருக்கும் என்று நவின்றுள்ளார்கள். (புஹாரி 2368).)

பின்னர் அத்தண்ணீரைக் குடித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் குழந்தைக்கு அதன் வயிறு நிறைய பாலூட்டுகிறார். சில நாட்கள் கழித்து அவ்வழியில் வந்த ஜுர்ஹும் எனும் குழுவினர் அங்கே இருக்கும் கதா எனும் கணவாயினருகே தங்கலானார்கள். அந்த ஆளரவமற்ற பாலைவனத்திலும் தண்ணீரைச் சுற்றியே வட்டமடிக்கும் பறவைகள் பறப்பதைக் கண்டு அவ்விடத்தில் நீர்நிலை இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். ஸம்ஸம் கிணற்றையும் அருகில் ஹாஜர் (அ.ஸ.) அவர்களையும் காண்கிறார்கள். அவர்களிடம் வந்து அவ்விடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள். அனுமதியளித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் மீது உங்களுக்கு உரிமையில்லை என்று சொன்னதையும் ஏற்ற ஜுர்ஹும் கூட்டத்தினர் அவ்விடத்திலேயே தங்களது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (புஹாரி. 3364)

பின்னாளில் ஜுர்ஹும் கூட்டத்தினரினிடத்தில் ஏற்பட்ட நேர்மையற்ற தன்மையினால், ஸம்ஸம் கிணற்றின் அருமைகளையும் அவசியத்தையும் அறிந்தவர்களாகவே, அக்கிணற்றையே மூடிவிட்டார்கள். பின்னர் சில காலங்களாக ஸம்ஸம் கிணறு மறக்கப்பட்டதாகவே இருந்துள்ளது.

முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் காலம் வரை அக்கிணற்றைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இறையில்லம் கஃபாவிற்கு புனிதப்பயணம் வரும் மக்களுக்கு தேவையான தண்ணிரை கொடுக்கும் பொறுப்பு மூதாதையர்களிடமிருந்து அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது. அருகில் நீர்நிலை ஏதுமில்லாத நிலையில் அப்பணி மிகவும் சிரமமாகயிருந்தது. அச்சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் முதல் இரண்டு நாட்களுக்கு 'இனிமையானதைத் தோண்டு' எனவும் 'அருளுக்காகத் தோண்டு' எனவும் அறிவிக்கப்பட்டதே தவிர ஸம்ஸம் கிணற்றின் இடம் சரியாக அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் நாள் கனவில் அக்கிணற்றின் இடமும் பெயரும் தெளிவாக அறிவிக்கப்பட்டதும் மறுநாள் காலையில் தன் மகன் அல் ஹாரிதுடன் அக்கிணற்றை புணரமைத்தார்கள். இதையறிந்த மற்ற மக்காவாசிகள் ஸம்ஸம் கிணற்றின் மீது உரிமை கொண்டாடினார்கள். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் மறுக்கவே தங்களிடையே நியாயமான தீர்ப்பு வழங்க ஒருவரைக் காண இரு குழுவினரும் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த காலத்தில் ஒட்டக பயணம் பல நாட்கள் நீளும். அப்படி செல்லும்போது அவர்களிடையே இருந்த தண்ணிர் தீர்ந்தது. கடுமையான தாகத்தால் மரணத்தை அவர்கள் அஞ்சிய அச்சமயம் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தின் காலடியில் நீர்ரூற்று தோன்றவே இது இறைவனின் பக்கமிருந்து அப்துல் முத்தலிபிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக இரு குழுவினரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஸம்ஸம் கிணற்றின் பொறுப்பு, அதாவது புனித பயணமாக கஃபாவிற்கு வரும் மக்களுக்கு ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் புகட்டும் பொறுப்பு அப்துல் முத்தலிபிடமே ஒப்படைக்கப்பட்டது. மற்ற மக்கவாசிகளும் ஸம்ஸம் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்குறிப்புகள்:

1.  இப்ராஹிம் (அ.ஸ.) அவர்கள் தமது இரண்டாம் மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வந்தாலும் அவர்கள் மனம் அவர்களைச் சுற்றியே வந்தது. அவர்களுக்காக மிகவும் கவலையுடன் இறைவனிடம் துஆ செய்தவர்களாகவே இருந்தார்கள். அத்துஆவானது:

14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

2. ஸம்ஸம் கிணறு உருவான வரலாறு மட்டுமே புகாரியில் காணப்படுகிறது. அதன் பின்னர் வரும் வரலாறு இப்னு கதிரில் இடம்பெற்றுள்ளது.

3. ஸம்ஸம் தண்ணீரின் அதிசய குணங்களை அறிந்த எத்தனையோ முஸ்லிமல்லாத சகோதர,சகோதரிகளும் முஸ்லிம்களிடமிருந்து ஸம்ஸம் தண்ணீரைக் கேட்டு பெற்று குடிக்கிறார்கள். ஆனால், கபட வேஷமிடுபவர்களால் ஸம்ஸம் தண்ணீரை ஓரளவிற்கு மேல் அருந்தமுடிவதில்லை. (இப்னு மாஜா 1017)

4. சஹீஹ் முஸ்லிம் எண். 2473 யில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கஃபாவின் அருகில் தொடர்ந்து தங்கியிருந்த அபு தர் என்பவர் முப்பது நாட்களுக்கு வேறு எந்த உணவுமின்றி ஸம்ஸம் தண்ணீரை மட்டுமே அருந்தியதாகத் தெரிவிக்கிறார்.

Thursday, April 5, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு

நாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாக காணப்படும் மற்றும் குளிகாலங்களில் 0 டிகிரிக்கும் குறைவாக வானிலை நிலவும் (ஆதாரம் - விக்கி) சவூதி அரேபியாவில் என்றுமே வற்றாத என்றுமே உறையாத கிணறு ஒன்று உண்டென்றால் அது இறைவனின் அற்புதமேயல்லாமல் வேறென்னவாக இருக்கும்?! ஆம்...அது ஸம்ஸம் கிணறேதான்.
ஸம்ஸம் கிணறு உற்பத்தியாகுமிடம்
வருடந்தோறும் மில்லியன் கணக்கில் மக்காவிற்கு புனித பயணம் வந்து செல்லும் உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் ஊறிக்கொண்டிருக்கும் அந்த கிணறுதான் எத்தனை உண்மைகளைச் சொல்கிறது?!

67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

மழையும் இயற்கை குடிதண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் வற்றாத நீரூற்றைக் கொண்டு வர எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் முடியும்?!

ஸம்ஸம் கிணற்றின் ஆழம்

சுவையிலும் குணத்திலும் என்றும் மாறாத த்ண்ணீரைக் கொண்ட அக்கிணறு 98 அடி ஆழமுள்ளதாகவும் 3 அடி 7" லிருந்து 8 அடி 9" வரை அகலமுள்ளதாகவும் இருக்கிறது.

ஒரு நொடிக்கு பதினொன்றிலிருந்து 18 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 660 லிட்டரும் ஒரு நாளைக்கு 950,000 லிட்டரும் கிடைக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரே கிணறும் ஸம்ஸம் கிணறு மட்டும்தான். அது மட்டுமல்ல, புனிதப்பயணத்திற்கு வருபவர்கள் தானும் குடித்து ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்லுகையில் குறைந்தது 10 லிட்டராவது எடுத்துச்செல்லும் அதிசயமும் நடைபெறுகிறது.

பொதுவாக எந்த இடத்திலும் தண்ணீர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பாசி படிவது இயற்கையானதே. ஆனால் ஸம்ஸம் கிணற்றில் பாசியோ பாக்டீரியாவோ உருவாகவேயில்லை. சுத்தமான குடிதண்ணீராக விளங்கும் இக்கிணற்றின் தண்ணீர்  பலவித சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. கால்ஷியமும் மக்னீஷியமும் அபரிமிதமாக இருக்கும் ஸம்ஸம் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவல்லதாகவும் பலநாட்களுக்கு பசி தீர்க்கவல்லதாகவும் இறை நாடினால் நோய் தீர்க்க வல்லதாகவும்  நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகில் கிடைக்கும் எந்த நிலத்தடி நீரை விடவும் ஸம்ஸம் கிணற்று நீருக்கு அதிக சோடியம், பொட்டாஷியம், ஐயோடின் சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. உப்புத்தன்மையும் காரத்தன்மையும் அதிகமாக இருக்கிறது. பல ரசாயனங்கள் கலந்திருந்தாலும் இவ்வளவுகள் அனைத்தும் உலக நல அமைப்பு குடிநீருக்கென வகுத்து வைத்திருப்பதற்கும் குறைவாகவே இருக்கிறது.

பாதுகாப்பு கருதி இக்கிணறு கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இக்கிணற்றின் நீர் பம்ப் செய்யப்பட்டு ஆங்காங்கே மக்காவிற்கு வருபவர்கள் எடுத்துச் செல்லவும் உபயோகிக்கவும்  வசதியாக dispenserல் சேமிக்கப்படுகிறது. இக்கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியால் அதன் நீரினளவு, மின்சார கடத்துந்திறன், போன்ற பல தன்மைகளின் இலக்கமுறைத் தரவுகளை (அதொண்ணுமில்லை...digital values)நேரடியாக இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம். இக்கிணற்றின் அடியில் இருக்கும் நீர்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீரை இதே அளவில் தொடர்ந்து பராமரிக்க, இக்கிணறு அமைந்திருக்கும் இப்ராஹிம் பள்ளத்தாக்கில் கிடைக்கப்பெறும், மழைநீரை வீணாக்காமல் சேமித்துவைப்பது, சுற்றத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கடுமையான விதிமுறைகள் வகுத்து பின்பற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளும் சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன.


எந்த ஒரு மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அது அந்த குறிப்பிட்ட மதத்தவர்கள் மட்டுமே நம்பும்படியாகவும் மற்ற மதத்தவர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகவுமே இருக்கிறது. அது இஸ்லாத்தின் மற்ற எந்த நம்பிக்கையான சம்பவமுமேயானாலும் மற்ற மதத்தினருக்கு நாம் விளக்கினாலே அன்றி புரியவைக்க முடியாது.

ஆனால் ஸம்ஸம் கிணறும் அதன் தண்ணீரும் அப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமளிக்காதவைகளில் ஒன்று. ஸம்ஸம் தண்ணீரின் நற்குணங்களை உலகின் அனைத்து மக்களும் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஸம்ஸம் கிணறு உருவான இஸ்லாமிய வரலாறும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஸம்ஸம் கிணறு உருவான விதம், அதைக் கண்டெடுத்த கனவு பற்றிய விபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.