Thursday, October 18, 2012

நாம எல்லாரும் விஞ்ஞானிதான்!!

நாம எல்லாருமே குடும்பம், குழந்தைன்னு ஆனத்துக்கப்புறம் நம் வாழ்வில் ஏங்குறதுனு ஒண்ணு இருந்ததுன்னா அது நம்முடைய இளமைப்பருவம்...அதுவும் நம் குழந்தைப்பருவம் என்பது ஒவ்வொருவரும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம். நம் கணவரிடமும் நம் குழந்தைகளிடமும் நம் குழந்தைப்பருவத்தைப் பகிர்ந்து கொள்வோம். (நானெல்லாம் குழந்தையா இருக்கறச்சே.. அப்படீன்னு ஆரம்பித்தாலே அவங்க ஓடிடுவாங்க...அது வேற கதை :))

அப்படிப்பட்ட என் சிறுவயது காலங்களில் உலகில் நடக்கும் சில விஷயங்களை அது எப்படி நடக்கிறது என்று புரியாத பருவத்தில் அது பற்றி நானே கற்பனை செய்து நம்பிக் கொண்டிருந்ததை உங்களிடம் பகிர்ந்து உங்க பாராட்டை அள்ளிக்கலாம் என்று முடிவு செய்ததன் விளைவுதான் இந்தப்பதிவு. ஹி..ஹி..ஹி...

அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி... குழந்தைகளை ஈர்க்க இந்த மீடியாக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம்... விளம்பரங்கள். அந்த காலத்தில எங்க வீட்டில் தூர்தர்ஷன் மட்டுந்தான். சன் டீவி, கேபிள் டீவி எல்லாம வந்ததுக்கப்புறமும் தூர்தர்ஷனிலேயே மூழ்கி முத்தெடுத்துக்கிட்டு இருந்தோம் எங்க வீட்டில மட்டும். ஆங்... சொல்ல வந்த மேட்டர் இதுதான்.... இந்த விளம்பரத்தை எல்லாம் பார்த்து நான் முடிவு செய்தது..... இதுதான்... அட...நாம் டீவி ஆன் செய்யும்போதெல்லாம் இந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க தயாராகி நேத்து நடிச்ச மாதிரியே இன்னிக்கும் நடிக்கிறாங்களே.... அதே மாதிரி கப்பை உடைக்கிறாங்க... அதே மாதிரி ஒட்ட வைக்கிறாங்க...  அதே மாதிரி காயம் ஏற்படுது.... அதே இடத்தில் பேன்ட்-எய்ட் ஒட்டறாங்க...அதே மாதிரி.... இதே மாதிரின்னு பலப்பல கற்பனைகள்....
 
 
அதுக்கப்புறம் ஒரு நாள் எங்க அம்மாக்கிட்ட ஒரு பிட்டை போட்டேன்..... "ஏம்மா, நிஜமாவே இந்த வீட்டுக்கு பெயின்ட் அடிபாங்களா" என்று... அம்மாவும் 'ஆமா... இதெல்லாம் ரெக்கார்ட் பண்ணதுதானே" அப்படீன்ற மாதிரி ஏதோ ஒண்ணு சொல்லீட்டு அவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.... அப்பத்தான் வீடியோ கேஸட் ஒண்ணு இர்க்கறதே ஞாபகம் வந்தது.... எனக்கு நானே பல்பு கொடுத்துட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.... அதான் அடுத்த கற்பனை.....
 
இப்ப உதாரணத்திற்கு ஹமாம் சோப்பை எடுத்திட்டிங்கன்னா அந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க நிஜமாவே அந்த சோப்பை மட்டும் தான் பயன்படுத்துவாங்க.... வேற சோப் உபயோகப்படுத்தமாட்டாங்கன்னு நினைத்தேன்.... ஏன்னா அந்த சோப் தான் மிக உயர்ந்ததுன்னு அவங்க தானே அந்த விளம்பரத்தில் சொல்றாங்க.... சரி.... இவங்க ஹமாம் சோப் தான் யூஸ் பண்ணுறாங்கன்னு விளம்பரம் எடுக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்னு ஒரே யோசனை... அப்பத்தான் என் மூளைக்கு தோணுச்சு... (அடிக்க வராதீங்க.... கோபப்படாம வாசிக்கணும் :))) அதாவது அந்த விளம்பர கம்பனி வாசலில் ஒரு போர்டு மாட்டுவாங்கன்னு முடிவு பண்ணேன்... அந்த போர்டில் "ஹமாம் சோப் உபயோகப்படுத்துபவர்கள் தொடர்பு கொள்ளவும்" ன்னு எழுதியிருக்கும்னு நான் முடிவு பண்ணேன்....ஹி...ஹி.. அப்புறமாத்தேன் தெரிஞ்சுது... காசு கொடுத்த யார் வேணா என்ன வேணா சொல்லுவாங்கன்னு..... (ஆனாலும் ரொம்ப வெள்ளந்திங்க நான் :)))
 
அடுத்த ஆராய்ச்சி என்னன்னு பார்த்தீங்கன்னா....
 

சினிமாவில் நடிக்கிறாங்களே ஹீரோவும் ஹீரோயினும்.... அவங்க குரலுக்கு நான் அப்படியே அசந்து போய்ட்டேன்... (உண்மையான வாய்ஸுக்கு இல்ல....)... அதுவும் சினிமாவில் அழகான குரலில் பாட்டு படிக்கிறாங்களே... அதுவும் என்னமா கவிதையா பொழியுறாங்க.... கொஞ்சங்கூட யோசிக்காம அழகான வரிகளா போட்டு படிக்கீறாங்களேன்னு ஒரே ஆச்சரியம்தான் போங்க.... இந்த மாதிரி ஆச்சரியத்தில் வாய் பிளந்துட்டிருக்கிற ஸ்டேஜில் தான் ஒரு நாள் அந்த பேட்டியைப் பார்க்தேன்...
 
எஸ்.பி.பி. அப்ப்டீன்றவரோட பேட்டியை பார்த்தேன்... (இப்பத்தான ஒரு படத்துக்கு டைட்டில் வச்சவுடனேயே அந்த படத்தோட ஹீரோ,ஹிரோயின், டைரக்டர், ப்ரொட்யூஸர், கேமராமேன், லைட் பாய்னு எல்லாரையும் அழைத்து வந்து பேட்டி எடுக்கிறாங்க.... அவங்க என்னமோ நாட்டுக்காக போரில் பங்கெடுத்த மாதிரி அவங்க அனுபவத்தை எடுத்து விடுறாங்க.... இதுல தொகுப்பாளரோட கேள்வி வேற தாங்க முடியாது... அந்த பாட்டுல நடிச்ச உங்க அனுபவம் எப்படி இருந்தது.... இந்த படத்துக்காக, இந்த நாட்டு மக்களுக்காக அந்த கிராமத்தில போய்த் தங்கி கஷ்டப்பட்டு நடித்த உங்க அனுபவத்த கொஞ்சம் சொல்லுங்க'ன்னு இப்படியெல்லாம் சொல்லி அந்த ஹிரோவை அப்படியே தேசிய வீரர் ரேஞ்சுக்கு ஆக்கிவிடுறதே இவங்கதான்... இதெல்லாம் நமக்கு எழுத வராது...ஆமினாதான் இது பத்தி நல்லா விலாசித்தள்ளுவாங்க... :)))
 
ஓக்கே.. மேட்டருக்கு வர்றேன்... எஸ்.பி.பியின் பேட்டியைப் பார்த்தேன்... அவரும் ஏதோ ஒரு படத்தில் ஒரு டூயட் சாங்கில் ஹீரோவுக்காக படித்த பாட்டை படித்துக் காட்டி கொண்டிருந்தார்....அப்பத்தான் புரிந்தது.... அடப்பாவி மக்கா... அப்ப அந்த ஹீரோவும் ஹீரோயினும் படத்தில் பாட்டு படிக்கிறதில்லையா... வெறும் உப்புக்குச் சப்பாணிதானா....சரி...சரி.... இப்பவாவது தெரிய வந்ததேன்னு எனக்கு நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :((.... அப்ப எனக்கு ஒரு டவுட்டு.... அப்ப அந்த ஹீரோயினுக்கு பதில் யார் பாட்டு படிச்சிருப்பாங்கன்னு.... பக்கத்தில் இருந்த அக்காகிட்ட கேட்டேன்... ' அப்ப அவளுக்கு பதில் யார் வாய்ஸ் கொடுத்தாங்கன்னு எதுவும் சொன்னாங்களா"ன்னு கேட்டதுதான் தாமதம்... "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே"ன்னு ஒரே வரியில ஒரு இளம் விஞ்ஞானியை, அவளோட ஆராய்ச்சிகளை வார்த்தை கங்குளால் எரித்து சாம்பலாக்கிட்டா எங்க அக்கா... அவளுக்கு அந்த நேரத்தில் என்ன கவலையோ....:((
 
சரி... நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்ம ஆராய்ச்சியைப் பார்த்து ரொம்ப பொறாமை... வழக்கம்போல இதையும் நாமளே முடிவு பண்ணுவோம்னு களத்தில் குதிச்சாச்சு.... அதாவது எஸ்.பி.பி.யே ஹீரோயினுக்காகவும் கீச்சு குரலில் பிண்ணனி குரல் கொடுத்திருக்கார்னு (எஸ்.பி.பி.க்கு தெரிந்தால்...நொந்து போய்டுவார்) ரிஸர்ச் ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு நிம்மதியா தூங்கியாச்சு.... பின்னாளில் ஒரு நாள் ஃபீமேல் ப்ளேபேக் சிங்கர்ஸ் பற்றி வேறொரு ஆராய்ச்சியில் அறியப்பெற்று ரிஸர்ச் ரிப்போர்ட்டை மாற்றி எழுதினது தனி கதை.
 
 
இப்படியாக நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.... இதுவரை நான் சொன்ன ரிஸர்ச் பற்றியும் அதன் ரிப்போர்ட் பற்றியும் உங்க குழந்தைகளுக்கு சொல்லி அவங்க அறிவை வளர்த்து விடுங்க... அல்லது அவர்களையே நேரில் இந்த தளத்தைப் படித்து உலகத்தை புரிந்து கொள்ளச் சொல்லுங்க... ஏதோ என்னால் ஆனது....
 
என்ன இவ... இவ மானத்தை இவளே கப்பலேத்தி விடுறாளேன்னு நீங்க நினைக்கலாம்... என்ன பண்றது... எனக்கு ஒரு ஆளுக்காக கப்பல் கிளம்பாதாம்.... அதனால் உங்களையும் துணைக்கு அழைக்கிறேன்... ஃப்ரீ டிக்கட்.... இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதி உங்க அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கப்பலில் ஏறிக்கோங்க...:))))
 
இந்த பதிவைத் தொடர நான் இவர்களை அழைக்கிறேன்....;))
 
1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:)))
2. சிட்டுக்குருவி
 

Wednesday, October 10, 2012

எங்கிருந்தாலும் வாழ்க!!


இப்பல்லாம் எங்க பார்த்தாலும் புரட்சி...கலவரம்.... தடியடி... எல்லாவற்றுக்கும் காரணமானவர்கள் பாதுகாப்பா இருந்துக்கறாங்க... ஆனா பொதுமக்கள் தான் பாதிப்படையறாங்க... கடையடைப்பினால் சரியான சாப்பாடு கிடைக்காது.... பள்ளிக்குச் செல்ல முடியாது... பணிக்கும் செல்ல முடியாது.... தேவைக்கு மருத்துவமனைக்கும் போக முடியாது.... இப்படி பொதுமக்களாகிய நாம் படுற அவதி தாங்க முடியாது.....

அதிலயும் அரபு நாடுகள்ல நடந்த, நடந்து கொண்டிருக்கும் Arab  Uprising  எனப்படும் அரேபிய கலகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொது மக்களுக்கும் பீதியாகுது.... பதிவியில் இருக்கிறவங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கு. டுனீஷியா எனும் சிறிய நாட்டில் 17 டிசம்பர் 2010 அன்று அப்போதைய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பென் அலியின் 23 வருட கொடுங்கோலாட்சியை எதிர்த்து  முஹம்மது பூஅஸீஸி என்பவரின் உயிரிழப்பினால் ஆரம்பித்தது இந்த அரேபிய கலகம். 14 ஜனவரி 2011 அன்று பென் அலி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதால் நல்லவேளையாக (?) இருபத்தட்டே நாட்களில்  கலகம் முடிவடைந்தது. ஒரு வேளை அரேபிய கலகத்தின் ஆரம்பமாகயிருந்ததால் அவர் சரியான  ப்ப்ப்ப்ளான் பண்ணலையோ என்னவோ?! அந்த 28 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்பு 338 , 2147 பேர் காயமடைந்தனர்.
----------------------------
எகிப்தின் நவீன பிர் அவ்ன் என்று அழைக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ துனிஷிய கலகம் முன்மாதிரியாக இருந்தது. முபாரக்கின் ஆட்சியை கவிழ்க்க சதி தீட்டுவதில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பெரும்பங்கு வகித்தது. இப்படியாக முபாரக்கின் முப்ப்ப்ப்ப்ப்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தவை அவர் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்தது தான். .

25 ஜனவரி 2011 அன்று வெடித்த புரட்சியினால் சரியாக 18வது நாளில் 11 .02.2011  அன்று அதிபர் முபாரக் பதவி விலகினார். இந்த 18 நாட்களில் உயிரிழந்தவர்கள் 846, காயமடந்தவர்கள் - 6467.
-----------------------
கிட்டத்தட்ட தெற்கு ஏமனிலும் இதே கதை தான். தனது முப்பத்து மூஊஊஊன்று ஆண்டு கால பதவியிலிருந்து விலகினார் அலி அப்துல்லாஹ் சாலஹ். 27 ஜனவரி 2011ல் ஆரம்பித்த ஏமனிய புரட்சி ஒரு வருட காலம் நீடித்தது. அப்துல்லாஹ்வின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, அதே வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, தவக்குல் கர்மன் எனும் பெண்மணி நடத்திய புரட்சி ஏமனிய புரட்சியில் பெரும்பங்கு வகித்தது. இந்த ஓராண்டு கால புரட்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000, காயமடைந்தோர் 22000.
-----------------
ஏமனுக்குப் பிறகு தொடங்கிய லிபிய கலகம்தான் ஏதோ சினிமா மாதிரி இருந்தது. 15 பிப்ரவரி 2011 அன்று அந்நாட்டு அதிபர் முஅம்மர் கடாஃபிக்கு எதிராக வெடித்த புரட்சியால் 20 அக்டோபர் 2011 அன்று நாட்டை விட்டு தப்ப முயன்ற கடாஃபி  சுட்டு கொல்லப்பட்டார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார்.  8 மாதங்கள் நீடித்த இக்கலகத்தில் 30000 உயிரிழந்தனர், 50000 காயமடைந்தனர். (முந்நாள் அதிபர் கடாஃபியைப் பற்றி நிறைய எழுதலாம். தன் சொந்த எண்ணங்களையே சட்டங்களாக்கி தன் நாட்டில் நாஆஆஆற்பத்தியிரண்டு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடத்தியவர். அவருடைய வாரிசாக யாரையும் யாரும் கைகாட்டிவிடாதபடி அனைவரையும், தன் மகன்கள் உள்பட, தன் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்)
--------------------------
மேற்சொன்ன நாடுகளில் கலகங்கள் வெடித்ததன் தொடர்ச்சியாக 15 மார்ச் 2011ல் சிரியாவிலும் கலம் வெடித்தது. இன்னும் நடந்துகிட்டேயிருக்கு.... அந்த படுபாவி பஷார் அல் ஆஸாத் பதவிய விட்டு இறங்கவும் மாட்டேங்கறார்.... தன்னோட அமைச்சரவையில இருந்தே எத்தனையோ பேர் தனக்கெதிரா திரும்பினதுக்கப்புறமும் அவரோட பதவி வெறி அடங்கவில்லை.... தன் மக்களைத் தானே கொன்று குவிக்கிற தவறும் புரியவில்லை... உலகம் பூரா இருந்தும் எதிர்ப்பு வந்தும் சிறிய சிரிய நாட்டோடு தோழமையா பழகிட்டிருந்த எத்தனையோ நாடுகள் அவரோட எதிராளிகளுக்கே ஆதரவு மட்டுமல்ல ஆயுதமும் வழங்குவோம்னு பகிரங்கமா தெரிவித்த பின்பும் மண்டையில உறைக்க மாட்டேங்குது.... நானும் இந்த பதிவு எழுத இவ்ளோ நாளாகுதே.... நாம எழுதறதுக்குள்ள கலகம் முடிந்த நல்ல செய்தியோடு பதிவு போடலாம்னு காத்திட்டிருந்தேன்.(அப்பாடா... பதிவு போட தாமதமானதை சமாளிச்சாச்சு ;)))...
 
இந்த ஒன்றரை வருடங்களில் சுமர் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.:(((((
 
என்ன இவ, அடுத்த பதிவில் இஸ்ராவைப் பற்றி சொல்றேன்னுட்டு இப்ப இவ இஷ்டத்துக்கு ஏதோ எழுதறாளேன்னு நினைக்கிறீங்களா.... இதோ மேட்டருக்கு வந்துட்டேன் (அப்பாடா)...'உன்னோட தாய் நாடு எது' என அவளிடம் நான் கேட்டதுக்கு அவளோட பதில் 'சிரியா'. (இத முதல்லயே சொல்ல வேண்டியது தானே...)... பின் ஒரு நாள் அவளது வீட்டிற்குச் சென்று அவளுக்குப் பிரியாவிடையளித்து வந்தேன். அப்பொழுது தன் மேற்படிப்பு பற்றி என்ன்னிடமும் ஆலோசனை கேட்டாள் (இதிலேயே தெரிஞ்சிருக்குமே...அவள் எவ்ளோ அப்பாஆஆஆவின்னு :))). நானும் எனக்குத் தெரிந்ததை(?) எடுத்துச் சொல்லிவிட்டு, நினைவுப் பரிசு ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தேன்.
 
மற்ற நாடுகளில் போர் முடிந்து தேர்தலும் நடந்து ஏதோ ஒரு வழியா கலகமெல்லாம் ஓரளவிற்கு முடிந்து விட்டது. ஆனால் என் இனிய இஸ்ராவின் நாட்டில் மட்டும் இன்னும் போர் முடியல...:(((  மற்ற நாடுகளில் நடந்தப்போ இருந்தத விட இப்ப ரொம்ப கவலையாக இருக்கு..... இஸ்ரா எங்க இருக்கிறாளோ....அவள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ...எங்கே இருக்கிறார்களோ....செய்திதாளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு தான்.... சிரிய நாட்டுப் போர் விரைவில் முடிவு பெற நீங்கள் செய்யும் துஆவில் இஸ்ராவிற்காகவும் அவள் குடும்பத்தினருக்காகவும் ஒரு வரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நானும் இன்று முடியும்...நாளை முடியும் என்று எதிர்பார்க்கிறேன்... ஆனால் ஹிட்லர் சாகவில்லை.... இதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் ஆஸாத் நடத்தும் ஈவிரக்கமில்லாத போரின் பாதிப்பால் தம் சொந்த நாட்டை,வீட்டை விட்டு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள 1.5 மில்லியன் மக்களில் ஒருத்தியாக அவள் இருப்பாளா... அப்படியாவது அவள் உயிரோடு இருக்க வேண்டும்...

யா அல்லாஹ்.... நீ அதிகம் விரும்பும் தொழுகையாளிகளின், இமாமாக வாழ்க்கை நடத்தும் அம்மனிதரின் குடும்பத்தினரை எல்லா வளமும் பெற்று வாழ செய்வாயாக..... அவர்கள் நாட்டில் நடந்தேறும் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாயாக! ஆமீன்.

ஆதாரங்களனைத்திற்கும் விக்கிக்கு நன்றி. பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்க சகோஸ்!!