Thursday, January 31, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளின் விருப்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வாறே ஒப்பந்தமும் தயாரானது. இதனைக் கண்ட சஹாபாக்கள் பலருக்கும் "நாம் ஏன் இந்த அளவிற்குக் குறைஷிகளிடம்  தாழ்ந்து போக வேண்டும்" என வருத்தமடைந்தார்கள். இதனைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டும் திருப்தியடையாத வீரத்திற்கும் கோபத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்ற உமர்(ரலி) அவர்கள் கூறுவதாக இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள கருத்தாவது:


புகாரி 2731 - பிறகு நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, அபூ பக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் துதரல்லவா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இறைத்தூதர் தான்" என்று சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்" என்றார்கள். நான், 'அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நண்பரே! இறைத்தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். நான், 'அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம்வந்தோம்" என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை வலம்வரத்தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.
(ஸுஹ்ரீ(ரஹ்) உமர்(ரலி) தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:)
..நான் இப்படி (அதிருப்தியுடன் நபி(ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். ....


சுபுஹானல்லாஹ்..... குறைஷிகள் மேலிருந்த கோபத்தையும் அவர்களிடம் தாழ்த்து போய்விட்டதாகக் கருதிய சஹாபாக்களின் விரக்தியையும் சாந்தமான சில வார்த்தைகளால் அமைதிப்படுத்திவிட்டார்கள் அபூபக்ர்(ரலி). நபி(ஸல்) அவர்களின் எந்தவொரு செயலையும் காரணமின்றி இறைவன் நிறைவேற்றமாட்டான் எனும் அபார நம்பிக்கையில் நன்கு ஊன்றியிருந்ததாலேயே இத்தகைய தெளிவு அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அமையப்பெற்றிருந்தது.

ரோமப் பேரரசன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது போர்த்தொடுக்கத் தயாரான போது மதீனாவின் நிலைமையோ மிகவும் பலகீனமாக இருந்தது; பஞ்சத்தினால் மக்கள் மிகவும் வருந்திய சமயத்தில் போரில் பங்கு பெற இயலாதவர்களாக இருந்தனர். இந்நிலையிலும் ஸஹாபாக்கள் தமது இறையச்சத்தை நிலைநாட்டியவர்களாக இருந்தனர். பொருள் வசதி படைத்தவர்கள் தம்மாலான செல்வங்களைப் போருக்காகக் கொடுக்க முன்வந்தார்கள். பல சமயம் இத்தகைய அன்பளிப்புகள் வழங்குவதில் அபூ பக்ர்(ரலி) அவர்களே முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இம்முறை அவர்களை மிஞ்சிவிட எண்ணிய உமர்(ரலி) அவர்கள் தமது சொத்தில் பாதியினை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் முறை வந்த போது அவர்களது அன்பளிப்பைப் பெற்றுக்கொண்ட நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வமனைத்தையும் கொடுத்து விட்டீர்களே.... உமது குடும்பத்தினருக்காக எதை விட்டு வந்திருக்கிறீர்கள்’ என வினவினார்கள். ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு வந்திருக்கிறேன்’ என்றார்கள். இதனைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ‘இனி எப்போதும் அபூ பக்ர்(ரலி) அவர்களை நான் மிஞ்சவே முடியாது’ என்றார்கள். (இப்போர் உஸ்ராப்போர் எனவும் தபூக் போர் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போர் சமாதானப் பேச்சுவார்த்தையினால் தவிர்க்கப்பட்டது.)
ஹுதைபிய்யா உடன்படிக்கை நிறைவேறிய அடுத்த வருடம் முதல் ஹஜ் நிறைவேற்றப்பட்டது. நபிகளாரின் உடல்நலக்குறைவினால் அபு பகர்(ரழி) அவர்கள் இம்முதல் ஹஜ்ஜுக்கு தலைமை தாங்கினார்கள்.இஸ்லாமிய வரலாற்றில் இப்புனித பயணம் ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்) என இறைவனால் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர்(ரலி) அவர்களுடைய உரையின் முக்கிய அம்சங்களாவன பின்வருமாறு :

1.இணைவைப்பாளர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்களை (நான்கு மாதங்களுக்குப் பிறகு)  முறித்தல் (9:3)
2. இணை வைப்பவர்கள் ஹஜ் செய்வதை விட்டும் தடுத்தல்
3.இஸ்லாத்திற்கு முன் செய்ததைப் போல் நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வருவதை தடை செய்தல்
(புகாரி 4657, 369 )

ஒரு நாள் நபியவர்கள் உடல் மிகவும் பலவீனமடைந்த நிலையில் தன தோழர்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். "இறைவன் தன அடியான் ஒருவனிடம் இவ்வுலகம் வேண்டுமா அல்லது தன்னிடம் உள்ளது வேண்டுமா எனக் கேட்டபோது இறைவனிடம் உள்ளதையே அவ்வடியான் தேர்ந்தெடுத்துக் கொண்டான்" என அவர்கள் சொன்னபோது அபூபக்ர் அவர்கள் துக்கத்தினால் அழலானார்கள். அவ்வடியான் முஹம்மது நபிஎன்பதையும் அவர்கள் விரும்பிக்கேட்டது மரணத்தை என்பதையும் மற்ற சஹாபாக்கள் பின்னர்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அபூபக்ர அவர்களோ அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.(புகாரி 466). நபிகளாரின் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது நட்பு ஆழமாகயிருந்தது.

தமது நண்பரை ஆசுவாசப்படுத்திய நபி(ஸல்) அவர்கள் "அபூபக்ர அவர்களை விட  உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறிய மாட்டேன்" என்றும் கூறினார்கள். இதன்பின் முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் செய்த உபகாரங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காகத் துஆ செய்தார்கள்.

மதீனாவில் கட்டப்பட்ட மஸ்ஜிதுன் நபி என அழைக்கப்படும் நபியின் பள்ளியின் நபியவர்கள் மட்டுமே இமாமாக (தொழுகையைத் தலைமை தாங்கி நடத்துபவராக) இருந்து வந்தார்கள். நபியவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அபூபக்ர்(ரலி) அவர்கள் இமாமாக இருப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இச்சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவியும் அபூபக்ர்(ரலி) அவர்களது மகளுமாகிய ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுவது புகாரி-712 ல் இடம்பெற்றுள்ளது. 

712. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை 'நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு  மனிதர்களுக்கிடையே தொங்கியவ்ர்களாக (ப்பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள். 


அபூ பக்ர்(ரலி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற பல தொழுகைகளின் ஒன்றிற்குப் பின் நபியவர்கள் பலத்த குரலில் உரையாற்றுகையில்         "அனைவரையும் விட அதிகமாக அபூபக்ர்(ரலி) அவர்களுடைய செல்வத்திற்கும் நட்பிற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். எவரேனும் ஒருவரை என்    நண்பராக ஆக்கிக்கொள்ள முடியுமென்றால் அபூபக்ரையே எடுத்துக்கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நம் நட்பிற்குப் போதுமானதாகும்" என கூறினார்கள்.

ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் மாதத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையேயான அந்த அழகிய நட்பும் நபிகளாரின் மரணத்தினால்  முடிவுக்கு வந்தது. (இன்னாலில்லாஹி ....) இத்தருணத்தில் அபூபக்ர் (ரழி) அவர்கள் வெளியூரில் இருந்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவர்கள் மனம் இதை நம்ப மறுத்தது. தாங்க முடியாத மனவேதனையுடன்  உடனடியாக நபியின் மனைவியும் தனது மகளுமாகிய ஆயிஷா(ரழி) அவர்களது வீட்டிற்குச் சென்று செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கண்களில் நீர்ப்  பெருக்கெடுத்து ஓட செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

‘இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். உங்களது வாழ்வும் மரணமும் புனிதமானவை ஆகும்’ எனத் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியவர்களாக வெளிவந்தார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் துக்கம் தாளாமல் மிகவும் கவலையடைந்தார்கள். அவர்களுக்கு எத்தனை சமாதானம் சொல்லியும் உமர்(ரழி) அவர்கள் இதை நம்ப மறுத்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் மனிதர்கள் அனைவரும், முஹம்மது நபி(ஸல் உள்பட, மரணத்தை சுவைத்தே தீருவார்கள் எனும் இறைவசனத்தை ஓதலானார்கள்:

3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

‘இவ்வசனத்தை நேற்றுதான் நபியவர்கள் ஓதிக்காண்பித்தது போல் இருக்கிறது’ எனக் கருத்துத் தெரிவித்தவர்களாக உமர்(ரலி) அவர்கள் மற்றும் அனைவரும் நபியவர்களின் மரணச்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.

 அபூபக்ர்(ரழி) அவர்கள் கலீஃபாவாக ஆற்றிய சேவைகளை இன்ஷா அல்லாஹ் விரைவில் பார்ப்போம்.

Monday, January 21, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1
 
முஹம்மது நபிக்குப் பின் நாடாள வேண்டியவர்கள் நபிகளுடன் இருந்து ஆற்ற வேண்டிய, நன்மை ஈட்டித்தரும் கடமைகள், அவர்களது செல்வசிறப்பால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் என எத்தனையோ செயல்கள் அவர்கள் ஆற்ற வேண்டியிருக்க அவர்களை இப்னு தம்னா என்பவரின் மூலமாக அவரை மறுபடியும் நபிகளிடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறான்.

புகாரி ஹதீஸ் எண்  2297ன் ஒரு பகுதி:

முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல்கிமாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார். இப்னு தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

அவ்வடைக்கல்த்தில் இருந்த சமயம் அபூபக்ர்(ரலி) அவர்களது வெளிப்படையான இறைபக்தியைக் கண்டு குறைஷியர்கள், அபூ பக்ர் தங்களுக்கு இடையுறு செய்வதாக இப்னு தமனாவிடம் முறையிட அபூ பகர் "எனக்கு இறைவனின் அடைக்கலமே போதுமானது. தயவுசெய்து தங்களது அடைக்கலத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்" என இப்னு தம்னாவிடம் சொல்லிவிட்டார்கள். (புகாரி 2297)

மக்காவிலிருந்து பல முஸ்லிம்கள் அமைதியை நாடி இறைவனுக்காக அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடு துறத்தல்) செய்தார்கள். மதீனாவில் இஸ்லாம் எட்டுத்திசையிலும் பரவி மக்களை முஸ்லிம்களாக்கியிருந்தது. நபி(ஸல்) தமது கனவிலும் மதீனா நகருக்கு மக்கள் ஹிஜ்ரத் செய்வதைக் கண்டார்கள். ஆகையினால் ஹிஜ்ரத் செய்வதற்கு, மதீனாவை நபியவர்கள் தேர்ந்தெடுத்து ஹிஜ்ரத் செய்ய, மக்கத்து முஸ்லிம்களைப் பணித்தார்கள். இதனையறிந்த, அபிசீனியாவிற்கு ஏற்கனவே ஹிஜ்ரத் செய்திருந்தவர்களும் மதீனாவிற்குத் தம் இருப்பிடத்தை மாற்றிகொண்டார்கள்.அபூபக்ர்(ரலி) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஆலோசனை செய்யும்பொழுது இறைவனது அனுமதிக்காகத் தாம்  காத்திருப்பதாகவும் அதுவரை பொறுமைகாக்கவும் தமது நண்பரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள்.


மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்ய இறைவனிடமிருந்து செய்தி வரவே நபியவர்கள் புறப்படலானார்கள்.முக்கிய சஹாபாக்கள் அனைவரும் ஏற்கனவே ஹிஜ்ரத் செய்திருக்க அலீ(ரலி) அவர்களிடம் தம்மை நம்பி மக்கத்து மக்கள் ஒப்படைத்திருந்த அமானிதப்பொருட்களை ஒப்படைத்து விட்டு நபி(ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். இநநாளுக்காகக் காத்திருந்து பல ஏற்பாடுகள் செய்திருந்த  அபூபக்ர்(ரலி) அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள்.மதீனா செல்லும் வழியில் தவ்ர்  குகையில் மூன்று  நாட்கள் தங்கச செய்து எதிரிகளிடமிருந்து அவர்களிருவரையும் இறைவன் பாதுகாத்தான். அச்சமயத்தில் அச்சங்கொண்ட அபூபக்ருக்கு முஹம்மது நபியவர்கள் 'இறைவன் நம்முடன் இருக்கிறான் ....அஞ்சாதீர் அபூபக்ரே' என தைரியமூட்டினார்கள். இந்நிகழ்வையே இறைவன் தனது திருமறையில் (9:40) குகையில் இருந்த இருவர்" என முஹம்மது நபி (ஸல்)அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் குறிப்பிடுகிறான். தமது தந்தையும் கணவரும் ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியை ஆயிஷா (ரலி) அவர்கள் அழகாகக் கோர்வையாக கூறும் ஹதீஸ்:

புகாரி 3905 -  அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகுவிரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தன்னுடைய இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு 'கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) 'ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாள்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் - அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார் பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டும் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போன்று அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அச்செய்திகளைக் கொண்டு வந்து விடுவார். 


அவர்கள் இருவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா (அபூ பக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள் - அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் - அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் செல்வார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தில் 'பனூ அத்தீல்' என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை பயண வழி காட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களின் இரண்டு வாகன (ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் 'ஸவ்ர்' குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இருவாகனங்களுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார்.


பின்னர் நடந்த நிகழ்வுகளை அபூபக்ர்(ரலி) அவர்கள் ஆஸிப்(ரலி) அவர்களிடம் இவ்வாறு விவரிக்கிறார்கள்:

புகாரி 3917: 'எங்களின் மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும் வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக்குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஒன்றை விரித்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீது படுத்தார்கள். நான் அவர்களைச் சுற்றிலுமிருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தன்னுடைய சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், 'இளைஞனே! நீ யாருடைய பணியாள்?' என்று கேட்டேன். அவன், 'நான் இன்னாரின் பணியாள்" என்று சொன்னான். நான், 'உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?' என்று கேட்டேன். அவன், 'ஆம்" என்றான். நான், 'நீ (எங்களுக்குப்) பால் கறந்து தருவாயா?' என்றான். பின்னர், அவன் தன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து வந்தான். நான் அவனிடம், 'அதன் மடியை (புழுதி போக) உதறு" என்று சொன்னேன். பிறகு, 'அவன் சிறிது பாலைக் கறந்தான். என்னிடம் தண்ணீருள்ள தோல்ப் பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் துண்டுத் துணியொன்று (மூடி) இருந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருந்தேன். அதைப் பால் (பாத்திரத்தின்) மீது அதன் கீழ்ப்பகுதி குளிர்ந்து போகும் வரை ஊற்றினேன். பிறகு அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் திருப்தியடையும் வரை (அதை)ப் பருகினார்கள். பிறகு, எங்களைத் தேடிவந்தவர்கள் எங்கள் தடயத்தைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்க நாங்கள் புறப்பட்டோம். 

இவ்வாறாக இருவரும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். ரபியுல் அவ்வல் 12ம் நாள் மதீனா வந்தடைந்த அவ்விருவரில் மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) யாரென்று அடையாளம் தெரியவில்லை அப்பொழுது கொளுத்தும் வெயிலில் நபிகளாரின் தலை மீது போர்வையை அபூபக்ர் அவர்கள் போர்த்தியதால் மக்களுக்கு நபி(ஸல்) யாரென்றும் அபூபக்ர்(ரலி) யாரென்றும் அடையாளம் தெரிந்தது. (புகாரி 3911). இது போன்ற சிறு சிறு உதவிகளை நபி(ஸல்) அவர்களுக்குச்  செய்வதில் அபூபக்ர் அவர்கள் மனத்திருப்தியும் இறைப்பொருத்தமும் நன்மைகளும் பெற்றுக்கொண்டார்கள்.

மக்காவிலிருக்கும் தமது உடைமைகள் அனைத்தையும் துறந்து மதீனா சென்றடைந்ததும் ஒவ்வொரு முஹாஜிருக்கும் ஒவ்வொரு அன்சாரியைச் சகோதரத்துவத்திற்காக நபியவர்கள் இணைத்து வைக்கிறார்கள்.அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு காரிஜா பின் ஸைத் எனும் அன்சாரி உடன்பிறவா சகோதரராகக் கிடைக்கிறார். நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர் அவர்களைத் தம் சகோதரராக அடைந்த மகிழ்ச்சியில் காரிஜா பின் ஸைத் அவர்கள் தாம் சம்பாதித்த சொத்தனைத்திலும் பாதியை அபூபக்ர்(ரலி) அவர்களுக்குத் தர முன்வந்தும்  அபூபக்ர்(ரலி) அவர்கள் புன்முறுவலோடு மறுத்துவிடுகிறார்கள்..

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற பத்ருப்போர், முன்றாமாண்டு நிகழ்ந்த உஹதுப்போர்,ஐந்தாமாண்டு ஏற்பட்ட அகழ்ப்போர், ஆறாமாண்டு செய்யப்பட்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை, ஏழாமாண்டு கைபர் யுத்தம், எட்டாமாண்டு மக்கா வெற்றி ஆகிய அனைத்திலும் நபி(ஸல்) அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தமது பணியினைச் செவ்வனே நிறைவேற்றினார்கள் அபூபக்ர்(ரலி) அவர்கள்.  ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது உமர்(ரலி) அவர்களுக்கும் அபூபக்ர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல் இன்ஷா அல்லாஹ் விரைவில்.....

Tuesday, January 15, 2013

எதிர்க்குரலும் போட்டிகளும்


போட்டி...போட்டி...போட்டா போட்டி.. என்று போன மாதம் ஒரு பதிவு போட்டேன். பதிவுலகில் நான் பங்குபெறவிருக்கும் முன்று போட்டிகளைப் பற்றிய விபரங்கள் பற்றிய பதிவு தானது. 

அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் வந்துவிட்டன.

முதலில் இஸ்லாமியப்பெண்மணி நடத்திய கட்டுரைப் போட்டி. மிக அற்புதமான முறையில் நடத்தப்பட்ட போட்டியில் பதிவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதன் மூலம் பலரின் எழுத்தாற்றல் மட்டுமின்றி... தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வித்துறையில் பிந்தங்கியிருப்பதர்கான காரணங்களும் கல்வியில்  அனைவரும் சிறந்து விளங்க  பலவழிமுறைகளும் ஆலோசனைகளும்  வழங்கப்பட்டிருந்தன. முதல் முன்று பரிசுகளை வென்ற கட்டுரைகள் இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் விரைவில் இடம்பெறும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்:

கடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக  ரூபாய் ஐந்தாயிரம்  தட்டிச் செல்பவர்...

சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.
பெற்ற மதிப்பெண்கள் : 104.5

இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :

சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
பெற்ற மதிப்பெண்கள் : 100.5

மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம்  வென்றவர்:

சகோ. இப்னு முஹம்மது, கோவை.
பெற்ற மதிப்பெண்கள் : 97.5

இக்கட்டுரைப் போட்டிக்காக இதில் பங்கேற்ற ஒருவர் தமிழக அரசின் தகவலறியும் சட்டத்தின் உதவியினை நாடியது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

பலர் கையால் எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டிக்கு அனுப்பியுள்ளார்கள். இதுவும் என்னை ஆச்சரியத்திலாழ்த்திய விஷயங்களில் ஒன்று. இந்த காலத்தில் பள்ளி/கல்லூரிக்கு வெளியே பேனா உபயோகத்தை நான் கண்டது மிகவும் குறைவு. :( ....

போட்டிக்கும் போட்டிக்கு வந்த கட்டுரைகளுக்கும் உள்ள உறவினை  இத்தோடு  முடித்துக்கொள்ளாமல் தமது எழுத்தின் மூலம் தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்  ஒரு நல்ல மாற்றத்தினை உருவாக்கித்தர பங்கேற்றவர்கள் எடுத்துவைத்துள்ள சிறந்த ஆலோசனைகளை  நடைமுறைப்படுத்தவும் போட்டியாளர்கள்  முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது. 

எனக்கு என்ன பரிசா... ஹி... ஹி... நான் எழுதிய கட்டுரையை நடுவர்கள் வாசிச்சதே  என் பெரிய வெற்றி..... என் மதிப்பெண்ணை அறிய ஆவலாக இருப்பவர்கள்(ஹி..ஹி ....) (பானு எனும் பெயரில் இருக்கும்) இங்கு போய்க் காணலாம். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக விற்கப்பட்டுகொண்டிருக்கும்  எதிர்க்குரல் புத்தகமும் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் கிடைக்கப்பெற்றுள்ளேன். இறைவனுக்கே புகழனைத்தும்!!

எதிர்க்குரல் 

பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் ஆக்கங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக  ஒரு சேர உருவாக்கியிருக்கிறார்கள் உம்மத்  குழுவினர். அதுவே எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப்பதிவர்கள்)... இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்களின் மீதும் உங்கள் கண்ணோட்டத்தினை நல்ல முறையில் விரிவாக்க உதவும். ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமான கோணத்தில் இஸ்லாத்தினை புரிந்திட வழிவகுக்கும். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் ரூ. 50 ல்  கிடைக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பெற இயலாதவர்கள் இந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் உங்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆஷிக் அஹமத் : 97895 44123
சகோதரர் சிராஜ்: 99415 85566

இ.மெயில் மூலம் தொடர்பு கொள்ள aashiq.ahamed.14@gmail.com, vadaibajji@gmail.com

மேலும் விபரங்களுக்கு:



இப்புத்தகத்தின் பலப்பிரதிகள் இன்னுமதிக வேகத்தில் விற்பனையாக இறைவன் உதவி செய்வானாக! ஆமீன்!!
 _______________________________________________________________________________

அடுத்து ஜலீலாக்கா நடத்திய பேச்சுலர்ஸ் ஃபீஸ்ட் போட்டி.... பங்கு பெற்றவர்களின் குறிப்புகளை பேச்சிலர்களின் ஆலோசனைகளையும் கேட்டு முடிவுகள் அறிவிச்சிருந்தாங்க... இதற்கு முன்று குறிப்புகள் அனுப்பியிருந்தேன். அவற்றில் ஈஸி இறால் குழம்பு  எனும் குறிப்பிற்கு சிறந்த பக்க உணவு குறிப்பிற்கான  விருது வழங்கியிருக்காங்க.... நன்றிக்கா....போட்டியை அறிவித்ததிலிருந்து மின்னஞ்சல் மூலமும் அதற்கென உள்ள மென்பொருள் மூலமாகவும் பதிவர்கள் உற்சாகமாக அனுப்பிய நூற்றுக்கணக்கான குறிப்புகளைத் தரம் பிரித்து, அனுப்பியவர்களின் சரிபார்த்தலையும் கேட்டு, பங்கேற்ற ஒரு பதிவரையும் விடாமல் அனைவருக்கும் விருதுகள் வழங்கி, பலரது பேராதரவைப் பெற அப்பப்பா..... தனியாளாக போட்டியை வெற்றிகரமாக நடத்திவிட்டார்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா... (இனிதான் வெற்றியாளர் அறிவிக்கப்படனும்)...

பிற்சேர்க்கை:  ஜலீலாக்கா...வெற்றியாளர்கள் பெயரை அறிவித்து விட்டார்கள். கிச்சன் குயினாக ஃபாயிஸா காதரும் கிச்சன் கிங்காக வை.கோ. சாரும் வாகை சூடியுள்ளார்கள்.

மகி அருண், அதிரா, அஸ்மாக்கா, அமைதிச்சாரல், ஆமினா, ஆசியா - (நானும் என் பெயரை 'அ'வில் தொடங்குமாறு வைக்கப்போகிறேன் :)) ஆகியோருக்கு சூப்பர் அன்பளிப்புகள் வழங்கியிருக்காங்க... மனமார்ந்த வாழ்த்துக்கள் சமையல் வல்லுனர்களே....

(மெயிலில்) ஜலீலாக்கா என் குறிப்பு முதல் 12 இடங்களில் வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தாங்க... இன்னும் நல்ல அக்கறையுடன் குறிப்புகள் அனுப்பியிருக்கலாம் எனவும் சொல்லியிருந்தாங்க ....அக்கா.... என் வாழ்க்கையிலேயே முதல் சமையல் குறிப்பு உங்களுக்காக எழுதினது தான்க்கா..... சமையல் ராணிகள் எத்தனையோ பேரிருக்க...சரி..நம் பங்கிற்கு அனுப்பிவைப்போம் எனும் அளவிலேயே என் எண்ணம் இருந்தது....  குறைகளையும் நிறைகளோடு சொன்னாதான்க்கா அடுத்த முறை திருத்திக்க முடியும்.....நீங்கள் நடத்திய முதல் ஈவன்ட் மிக்க வெற்றிகரமாக அமைந்ததில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த ஈவன்ட்டில் எனக்குக் கிடைத்த விரு(ந்)துகள்.
_________________________________________________________________________________

அடுத்து ஃபாயிஸா  காதர் குழந்தைகளுக்கான வரையும் போட்டி நடத்தினாங்க.... 7 வயதாகும் என் மகனைக் கெஞ்சி மன்றாடி படத்தினை வரைந்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.. முதலில் அழகிய படம் எதாவது அனுப்பும் முடிவில்தான் இருந்தேன்.... அது கொஞ்சம் சிரமமாக இருந்தது அவனுக்கு.... பிறகு... சுட்டி டீவியில் குழந்தைகளுக்கான  போட்டியொன்றில் ஒரு சிறுமி வரைந்த படத்தில் தீம் வைத்திருந்தது கண்டேன்..(நன்றி...சுட்டி டீவி).... சரி... நாமும் அப்படியே வரையலாம் என்று இயற்கை பாதுகாப்பிற்கான சில விதிகளைக் கூறி தகுந்த படத்தினை வரைந்தும் அனுப்பியாயிற்று.... பிறகு, முடிவு வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் தனக்கு வந்த படங்களை பாயிஸா வெளியிட்டிருந்தார்கள். எல்லாமே வரையும் திறமையை அடிப்படையாக வைத்து அமையப்பெற்றிருந்தன. ஆகா.... நாம் மட்டும் தீமெல்லாம் வைத்து அனுப்பிவிட்டோமொன்னு கொஞ்சம் யோசனையாக இருந்தது. இறைவன் அருளால், என் மகனுக்கு 7-10 வயதினர் பிரிவில்  இரண்டாமிடம் கிடைத்தது. முதலிடம் சஃபியா முஸ்கானுக்குக் கிடைத்தது.....




இப்படியாக, போட்டிகள் நிறைவுற்றன. எந்நேரமும் பதிவுகள் பற்றி (சரி..சரி... பிறரின் பதிவுகள்....போதுமா..அவ்வ்வ்வ்...) மட்டுமே சிந்தனை ஓடும் நாட்களை விட பதிவு சாராத நம் திறமைகளை வெளிக்கொணர இந்த போட்டிகள் உதவின; உற்சாகப்படுத்தின; (மிக முக்கியமாக எனக்க்க்கே சிந்தனையைத் தூண்டின...ஹி...ஹி...) என்றால் மிகப்பொருத்தமாகும். போட்டிகளில் பங்கு பெற்ற நினைவுகள் என்றும் நினைவை விட்டும் நீங்காதவை.... வாழ்க்கையில் மாற்றங்கள் காண இது போன்ற போட்டிகள் பெரிதும் உதவுகின்றன. போட்டிகளில் பங்கு பெறுபவர்களை விட போட்டி நடத்துபவர்களுக்கு அதிகப் பொறுப்புகள் உண்டு. பிறரின் மகிழ்ச்சிக்காக தமது நேரத்தினைப் பகிர்ந்த சகோதரர்களுக்கு எனது பணிவான நன்றிகள்; வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ்.

(தலைப்பைப் பார்த்துவிட்டு காரசாரமான பதிவை எதிர்பார்த்து இவ்வலைப்பூவிற்கு வந்தவர்கள் சிறிது  மிளகாயினைக் கடித்துக்கொண்டு வாசிக்கவும்..... ஹி ... ஹி ...ஹி ...)

அபூபக்ர்(ரலி) அவர்களது வரலாற்றின் அடுத்த பகுதி விரைவில்.... மன்னிக்கவும்.

Saturday, January 5, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு மட்டுமே அடிபணிதல், இறைவனிடமிருந்து இறங்கிய வேதத்தையும் அவன் அனுப்பிய தூதர்களையும் மனதார ஏற்று நம்புவதும்  ஆகும்.

அவன் இறக்கிய தவ்ராத், ஜபூர், இன்ஜீல் ஆகிய வேதங்களை அவனது நான்காம் வேதமாகிய குர் அன் உண்மைப்படுத்துகிறது அவனுடைய எண்ணற்ற தூதர்களை இறுதி நபி முஹம்மது உண்மைப்படுத்துகிறார்.

இவ்வுலக மக்களில் முஹம்மது நபியை முதன்முதலில் மற்றவருக்கு உண்மைப்படுத்தியவராகிய அபூபக்ர் சித்திக் எனும் சஹாபா (நபித்தோழர்) வைப் பற்றி சிறிது பார்க்கலாம்.
புகாரி 3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மொழிந்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தெரிவிக்கிரார்கள்::
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.
 
மாஷா அல்லாஹ் ... எவ்வளவு பெரிய சிறப்பு??  அபு பக்ர் (ரழி) அவர்கள் எந்த அளவிற்கு குணத்தில் சிறந்தவர்களாக இருந்திருந்தால் நபியவர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்ட ஒரு வெகுமதி கிடைக்கும்?
1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள். 
 
இத்தகைய சிறப்பு குணங்களைப் பெற்ற, உலகின் மேன்மையான மனிதரால் சுவன வாக்கு அளிக்கப்பெற்ற சஹாபாவின் வாழ்க்கை வரலாறில் சில முக்கிய தருணங்களை இப்பதிவில்  தெரிந்து கொள்வோம்.

573 கி.பி. யில் மக்காவில் உதுமான் எனும் அபூ கஹாஃபாவிற்கும் சலமா எனும் உம்முல்  ஃகைருக்கும் பிறந்தவர் அபூ பகர் (ரலி). அவரது இயற்பெயர் அப்துல்லாஹ்வாகும். அவரது குடும்பம் வணிகத்தில் சிறந்து விளங்கியது. அபூ  பகரின் வளமான செல்வம் அனைத்தையும் பின்னாளில் இஸ்லாத்திற்காகவே அளித்தார்.நபிகளாரைப் போலவே அபூ பகரும் அமைதியானவர், வாய்மையாளர், சிறு வயதிலேயே இருவரும் உற்ற தோழர்களாகத்  திகழ்ந்தனர். 

இன்றைய உலகில் குர்ஆனையும் இறைத்தூதர்களையும் மெய்ப்பிக்கவும்  அறுதியிட்டு சொல்லவும் சுய உணர்வுடன் ஆராய்ந்து பார்த்து நம்பவும்  ஆதாரங்களும் ஹதீஸ்களும் நிறைந்து காணப்படுகின்றன.

ஆனால் இது எதுவுமே வந்திராத காலகட்டத்தில்  நபியவர்கள் தனக்கு முதன் முதலில் வஹி  (இறை அறிவிப்பு)  வந்ததை தன் ஆருயிர் நண்பரிடம் பகிர்ந்த பொழுது மறு பேச்சில்லாமல் சிறிதும் யோசிக்காமல் "நான் உங்களை நம்புகிறேன் முஹம்மதே"  என எனக் கூறி இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர் அபு பக்ர் சித்திக் (ரலி).  இதன் மூலம் இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் எனும் அந்தஸ்தைப் பெற்றார் (முதல் பெண்மணி - நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) ஆவார்). முஹம்மது நபியின் நேர்மையும் அதற்கு ஒரு காரணம். நபியவர்களுக்கு வாய்மையாளர் எனும் அர்த்தம் கொண்ட சித்திக் எனும் பெயர் சூட்டப்படவில்லையே தவிர அவரது நேர்மையான குணத்தினால் மக்களிடம் அவர் சம்பாதித்த பெயர் சித்திக் ஆகும். ஒகே... முஹம்மது நபியைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டேயிருக்கலாமே...  அபூபக்ர் சித்திக் (ரலி) அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் மூலம் நம் இறைத்தூதர் மீது நமக்கிருக்கும் நம் நேசத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாமே!!

அபூபக்ர்  சிறிதும் தாமதிக்காமல் இஸ்லாத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் ரகசியமாக எடுத்துரைத்து அழைப்புப்பணியை மேற்கொள்ளலானார்கள். அவரது ரத்தத்தில் ஊறிய குணங்களாகிய  அவரது பெருந்தன்மையும், நம்பகத்தன்மையும் வாய்மையும் பொறுமையும்  அழைப்புப்பணிக்கு பெரிதும் உதவின (of  course , இறைவனின் உதவியோடு :)).

சிறிது காலம் கழித்து  இஸ்லாத்தை வெளிப்படையாக பரப்ப விரும்பினார்கள். நபியின் அனுமதியோடு முதன் முதலில் கஃபாவில் உரையாற்றினார்கள். ஏக இறைவனை தொழுதல் வேண்டும் எனவும் நபிகளுக்கு கிட்டிய இறை அறிவிப்பு பற்றியும் எடுத்துரைக்கலானார்கள். 
அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்:
  • உதுமான் இப்ன் அபான் 
  • அல்  ஜுபைர் 
  • தல்ஹா இப்ன் உபைதுல்லாஹ்
  • அப்துர்ரஹ்மான் பின் அவப் 
  • ஸாது இப்ன் அபி வக்காஸ்
  • அபு உபைதாஹ் இப்ன் அல்  ஜர்ராஹ் 
  • அபு சலாமா
  • காலித் இப்ன் சயீத் 
  • அபு ஹுதைபாஹ் இப்ன் அல்  முகிராஹ் 

ஒரு முறை நபியவர்கள் கஃபாவினருகில் தொழுதுகொண்டிருக்கும்போது  உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் அவர்களது கழுத்தில் துணியைக்கட்டி இழுத்து வேதனை செய்தான். அதனை தூரத்தில் இருந்து பார்த்த அபூபக்ர் அவர்கள் விரைந்து வந்து அக்கொடியவனைக் கடிந்து கொண்டார்கள். "இறைவன் ஒருவனே  எனும் உண்மையைச சொன்னதற்காகவா இவரைக் சொல்ல முனைகிறீர்கள்" என வாக்குவாதம் செய்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த உக்பாவும் அவனது கூட்டாளிகளும் அபூபக்ரை அடித்து உதைக்கலானார்கள். இதனால் மயக்கமடைந்த அபுபக்ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து  விழித்தெழுந்ததும் தன உடல்நிலையைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவர்கள்  கேட்ட முதல் கேள்வி "முஹம்மது எப்படியிருக்கிறார்கள்" என்பதேயாகும். (புகாரி 3678)

மாஷா அல்லாஹ்.... தன்னுடைய உயிர் உடைமைகளை உள்பட அனைத்தையும் விட அல்லாஹ்வையும் நபியையும் நேசித்து இறைநம்பிக்கையின் சுவையை அறிந்ததனால் (புகாரி-21) நபியவர்களால் சுவனத்தை வாக்களிக்கப்பட்ட பத்து சஹாபாக்களில்  அபூபக்ருக்குத்தானே முதலிடம் கிடைத்தது. (புகாரி 3674, திர்மிதி 3680).

அழைப்புப்பணியின் பத்தாவது ஆண்டில் அல்லாஹ் இறைத்தூதரை விண்வெளிப்பயணம் மேற்கொள்ளச்செய்தான். இதனை மக்களுக்கு எடுத்துரைத்த நபியவர்களை பலரும் ஏளனம் செய்ய, மறு பேச்சில்லாமல் சிறு சந்தேகமும் கொள்ளாமல் நம்பியவர்தான் அபூபக்ர் (ரலி). தக்க சமயத்தில் கிடைக்கப்பெற்ற அபூபக்ரின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகள் நபியவர்களுக்கு பெரிதும் ஆறுதலும் நம்பிக்கையும் மகிழ்வையும் கொடுத்தன; ஏனைய மக்களுக்கும் நல்வழி காட்டி நபியின் விண்வெளிப்பயணத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்து கொடுத்தது. எத்தனையோ மக்கள் அவ்விண்வெளிப்பயனத்தை கேலி கிண்டல் செய்து தமது நிராகரிப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்க , உண்மையை முதன் முதலில் மனதார  ஏற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் சித்திக் எனும்  பெயர் சூட்டி அழகுப்படுத்தினார்கள். 

அனைத்துப் போர்களிலும், அது வெற்றி பெற்றதாயினும் படுதோல்வி அடைந்த உஹதுப்போர் போன்றதாயினும் நிராகரிப்பாளர்களுடன்  நபிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் இட்ட நேரங்களாயினும் என நபியின் சுகமான, துக்கமான நேரங்கள் அனைத்திலும் உடனிருந்து ஆதரவு அளித்துள்ளார்கள்.
இஸ்லாம் சிறுக சிறுக பரவ ஆரம்பித்த காலத்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்த பலர் தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். தம் எஜமானர்களுக்குத் தெரியாமல் தமது இறைக்கடமைகளை நிறைவேற்றுவதென்பது அவர்களுக்கு பெரும் சிரமமாகயிருந்தது, அவர்களுடைய முதலாளிகளும் முஸ்லிம்களாக இருந்தால் தவிர. இறைவனை நிராகரிக்கும் முதலாளிகளாக இருந்தால் முஸ்லிம்களான தமது அடிமைகளை, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களை கொளுத்தும் வெயிலில் மணலில் படுக்க வைத்து அவர்கள் மீது பெரும் பாறைகளை வைத்து அவர்களை அசைய விடாமல் கொடுமைப்படுத்துவது போன்ற பல அக்கிரமங்கள் நிகழ்ந்து வந்தன. அபு பகர்(ரழி) அவர்கள் தம் செல்வத்தில் பெரும்பகுதியை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தை ஏற்காத தம் எஜமானர்களிடம் சித்ரவதை அனுபவித்த பல அடிமைகளை விடுவிக்க செலவு செய்துள்ளார்கள். அவ்வாறு அவர்களால் விடுதலையடைந்த அடிமைகளுள் சிலர்:
  • பிலால் இப்னு ரிபாஹ்
  • அபு பகிஹ் 
  • அம்மார் இப்ன் யாசிர்
  • அபு புஹைராஹ்
  • லுபைனாஹ்
  •  அழ நாதியாஹ் 
  • உம்மு உபைஸ் 
  • ஹாரிதாஹ் பின்த் அல்  முஅம்மில் 

நிராகரிப்பாளர்கள்  பல வேளைகளில் அபூபக்ருடைய உடலுக்கும் மனதிற்கும் கடுமையான வேதனை செய்யத் தொடங்கினார்கள். இதனால் மனவேதனை அடைந்த அபூபக்ர் நபியவர்களின் அனுமதியுடன் அபிசினியாவிற்கு அடைக்கலம் பெற விரும்பி பயணம் மேற்கொண்டார்கள். ஆனால் இறைவனது நாட்டமோ வேறாகவல்லவா இருந்திருக்கிறது....
இன்ஷா அல்லாஹ் விரைவில்.....