Wednesday, January 27, 2016

முஸ்லிம்கள் கோழைகளா?

சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி ஐ.எஸ் அமைப்பு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் எதிரிகள் அவ்வமைப்பைத் தகர்க்க முடிவெடுத்திருப்பதாகவும் தன் ஆடியோவில் தெரிவித்துள்ளார். ஆகையால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவ்வமைப்பில் சேர்ந்து பணிப்புரியுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பாதுகாப்பைப் பலப்படுத்த உதவுமாறு அழைத்திருந்தார்.

அந்தோ பரிதாபம்... எவ்வளவு பெரிய அமைப்பு... நியாயத்திற்காகப் போராடும் ஓர் அமைப்பிற்கு ஆபத்துகள் என்பவை நிச்சயம் தான். இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் அரும்பாடுபடும் மக்களுக்கு உலக முஸ்லிம்கள் நிச்சயம் உதவியே ஆக வேண்டும் என அவர் கேட்டதில் ஆச்சரியமேயில்லை. கருணை உள்ளம் கொண்டவர்கள் முஸ்லிம்கள் எனும் பெரும் நம்பிக்கையில் அவர் கேட்டுவிட்டார். 

ஆனால் இந்த முஸ்லிம்கள் செய்த காரியம்? கிஞ்சித்தும் கவலையின்றி.. அக்கறையின்றி ட்விட்டரில் பாக்தாதிக்கு அவர்கள் கூறிய பதில்களைப் பாருங்கள்.

1. என் பிள்ளைகளுக்கு அடுத்த வாரம் மேட்ச் உள்ளது. அதை என்னால் தவற விட முடியாது. மேலும் ஃபார்கோ காமெடி சீரியலை நான் பார்த்தேயாக வேண்டும்.

2. சமூக மேம்பாட்டுப் பணியில் தான் பிசியாக இருப்பதால் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்பில் ஈடுபட முடியாதாம் அடுத்தவருக்கு.

3. ஜிம்மிற்குப் போக வேண்டும். ஹோட்டலுக்கு உணவருந்த செல்லவிருருப்பதாலும் இன்னொருவரால் முடியவில்லையாம்.

4. ஸ்டார் வார்ஸ் அடுத்த பகுதியை இவருக்குத் தவற விட விருப்பமில்லையாம்.

5. தன் தந்தை தன்னை 8 மணிக்குள் வீட்டுக்கு வர சொல்லியிருப்பதால் இவராலும் முடியாதாம்.


என்னே ஒரு கல்நெஞ்சம் இந்த முஸ்லிம்களுக்கு. 24 நிமிடங்கள் தொண்டை கிழிய கத்தி உதவி கேட்டவருக்கு இதுதான் நீங்கள் காண்பிக்கும் அக்கறையா? ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடி முடித்து விட்டு பல் விளக்கும் வேலையைத் தியாகம் செய்தேனும் ஐ.எஸ். அமைப்பிற்குப் பாதுகாப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.